ரகசியம் உடைக்கும் கே.என்.நேரு எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ…

எக்ஸ்க்ளூசிவ்

ரகசியம் உடைக்கும் கே.என்.நேரு…
எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ…
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திருச்சி தி.மு.கவில் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் கே.என்.நேரு. பிற மாவட்டச் செயலாளர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிரமாண்டமான மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி கலைஞர் மற்றும் ஸ்டாலினையே ஆச்சர்யப்பட வைத்தவர். புள்ளம்பாடி யூனியன் சேர்மனாக தன்னுடைய அரசியல் இன்னிங்சை ஆரம்பித்தவர், லால்குடி சட்டமன்றத் தொகுதியில் 2 முறையும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 2 முறையும் என 4 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார்.
1989-91 வரை தமிழக மின்சாரத்துறை அமைச்சர், பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சராகிறார். 1996-2001ல் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகிறார். கடந்த 2006-2011 வரை போக்குவரத்து துறை அமைச்சர் என மூன்று முறை அமைச்சராக வலம் வந்தவரை, இன்றைக்கும் அவருடைய தொண்டர்கள் ‘அமைச்சர்’ என்றே அழைக்கின்றனர். எம்.எல்.ஏ, அமைச்சர், மாவட்டச் செயலாளர் என கடந்த 20 வருடங்களில் திருச்சியில் நேருவின் வளர்ச்சி அபாரமானது.
தினமும் தன்னுடைய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுவது, கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்கள், நிர்வாகிகளின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என எப்போதுமே பரபரப்பாக இருக்கும் கே.என்.நேரு அவர்களை தில்லை நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினோம்.
தி.மு.கவில் குறுநில மன்னர்கள் போன்று சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?
தொண்டர்களுடைய பலத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி தான் தி.மு.க. புதிதாக வருபவர்கள் அரசியலுக்கும், பதவிக்கும் வரவேண்டும் என நினைப்பதில் தவறில்லை. கட்சியில் தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என கட்சித் தலைமை சொல்கின்ற அத்தனை வேலைகளையும் செய்தவர்களை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை நியமித்தால், புதிதாக வருபவர் செல்வாக்கு ரீதியாக, தொண்டர்கள் ரீதியாக ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த 10 முதல் 15 வருட காலம் தேவைப்படும். நாங்க ஒன்னும் சும்மா இந்த இடத்துக்கு வந்துடலை. எங்களுக்கு முன்னாடி 200-300 பேர் இருந்தாங்க. காலப்போக்கில் அவங்க எல்லாம் ஒதுங்கிட்டாங்க. அதற்குப் பிறகு தான் எங்களால் அந்த இடத்திற்கு வர முடிந்தது.
நேருவைத் தாண்டி திருச்சி தி.மு.கவில் யாராலும் வளரமுடியாது என்கிற பிம்பம் இருக்கிறதே?
காலம் தான் ஒவ்வொருத்தருக்கும் வரணுமே தவிர, நாங்க யாரையுமே சேர்த்துக்கிறதுல்லைன்னு சொல்லப் போறதில்லை. வேற யார் வந்தாலும் நாம என்ன வேணாம்னு சொல்லப் போறாமா!… எல்லாமே தளபதி வாழ்க! கலைஞர் வாழ்கன்னு தான் சொல்றான். அதனால யார் வருகையையும் யாரும் நிறுத்தப் போறதில்லை. நான் என்ன சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயாவா?…யானையில வந்து மாலை போட்டு நீ மாவட்ட செயலாளராக இருன்னு சொல்றதுக்கு, இது அரசியல். இது போட்டி. இங்கு அவரவருடைய செயல்பாடுகளைப் பொறுத்து தான் பதவியும், வெற்றியும் கிடைக்கும்.
ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, எப்போதுமே பரபரப்பாக இருப்பது சலிப்பை ஏற்படுத்தவில்லையா?
சலிப்பு ஏற்படுதுனா கட்சியில இருக்க முடியாது. நிர்வாகிகள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, தினமும் தொண்டர்களை சந்திச்சி பேசுறதுன்னு செஞ்சா தான் பிரைம்ல இருக்கலாம்.
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக அரசியலில் நிலைத்திருப்பதன் சூத்திரம் என்ன?
தி.மு.கவுல இருக்குறவனே நான் எப்படா போவேன்னு பாக்குறான். பத்திரிக்கைக்காரங்க நீங்களுமா! (என பலமாக சிரிக்கிறார்!.). நான் மட்டும் இல்லை. திண்டுக்கல்ல ஐ.பெரியசாமி, கடலூர்ல எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விழுப்புரத்துல பொன்முடி, காட்பாடியில துரைமுருகன், கன்னியாகுமரியில சுரேஷ் ராஜான் 25 வருஷமா இருக்கார். கலைஞர் எங்களை அப்படி வளர்த்து வச்சிருக்கார். அது தான் இன்றைக்கு வரைக்கும் எங்களுக்கும், கட்சிக்கும் பலமாக இருக்கிறது. ஆனா, ஜெயலலிதா ஒரு தடவை சீட் கொடுத்தா மறு தடவை சீட் கொடுக்க மாட்டாங்க. அவங்களோட வாக்காளர்கள் அவங்க தலைமைக்காக நேரடியாக வாக்கு போட்டு பழகிட்டாங்க. இங்க நம்ம கட்சியில லோக்கல்ல இருக்குறவங்க ஒவ்வொரு ஊர்லயும் அவங்களுக்குன்னு தனி வாக்கு வங்கி வச்சி அதை காப்பாத்தி தி.மு.கவுக்கு கொண்டு வர்றாங்க. நானே இந்த ஊர்ல இருக்குறவங்களை நம்பி தான் அரசியல் செய்றேன். மத்தபடி பெரிய சூத்திரம் எல்லாம் இல்லை.
உங்களுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாக பேசப்படுகிறதே?
எனக்கு ஆகாதவங்க எதையாவது பேசுவாங்க. நமக்கு ஆகாதவன் நம்மளை என்ன வாழ்கன்னா சொல்வான். ஆயிரம் தான் சொல்வான்.செல்வராஜ் இருந்தவரைக்கும் அவருக்கும் எனக்கும் பிரச்சினைன்னு சொன்னாங்க. அப்புறம் சிவாக்கும் எனக்கும் பிரச்சினைன்னு சொன்னாங்க. அதேமாதிரி தான் ராசா, நெப்போலியன் கூடவும் பிரச்சினைன்னு சொன்னாங்க. நம்மளை பத்தி எதாவது குறை சொல்லணும்னா இதுமாதிரி எல்லாம் சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. ஆனா, எங்களுக்குள்ள எல்லாம் அந்த மாதிரி பிரச்சினைகள் எதுவும் கிடையாது.  ஜெயலலிதா – சசிகலாவுக்கு இடையில எவ்வளவு பிரச்சினை இருந்துச்சி. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா என்ன  ஒற்றுமையாக இருந்தாங்களா !…நாங்க சாதாரண மாவட்டத்துல இருக்கோம். எங்கிட்ட வந்து உங்களுக்கு அவரோட தகராறா, இவரோட தகராறான்னு கேட்டா எல்லோரிடமும் தகராறும் இருக்கும். எல்லோரிடமும் நட்பும் இருக்கும்.
கடந்த ஒரு வருடங்களாக தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சினகளை, 98 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துள்ள தி.மு.கவால் வெறுமனே வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகிறதா?
வேற என்ன செய்யணும், நீங்க சொல்லுங்க. எல்லா எதிர்ப்பும் காண்பிச்சாச்சி. பிரச்சினைகள் குறித்து நேரடியாக சட்டமன்றத்துல பேசியாச்சி. வெளிநடப்பும் செஞ்சாச்சி. வெளிநடப்பு பண்ணுணா உங்க ஆளுங்க பத்திரிக்கைக்காரங்க எல்லாம் சும்மா சும்மா தி.மு.க.ம் வெளிநடப்பு பண்றாங்கன்னு எழுதுறீங்க. சட்டசபையில எந்திரிச்சி சத்தம் போட்டா தி.மு.க அராஜகம் பண்ணுதுன்னு எழுதுறீங்க. சரி ரைட்டுன்னு அராஜகமும் பண்ணாம, வெளிநடப்பும் பண்ணாம இருந்தா சும்மா இருக்காங்கன்னு சொல்றீங்க. அதையெல்லாம் தாண்டி என்ன செஞ்சாலும் அவங்களுக்கு மத்திய அரசாங்கமும், கவர்னமும் பக்கபலமாக இருக்காங்க. நம்ம என்ன பண்ணாலும் மத்திய அரசாங்கம் ஆஃப் பண்றாங்க.கோர்ட்டுக்கு போயிருக்கோம். எங்களால முடிஞ்சது கோர்ட் தான். எல்லாரும் சொல்றாங்க 98 எம்.எல்.ஏக்களை வச்சிக்கிட்டு என்ன பண்றீங்க? என்ன பண்றீங்கன்னா? என்ன பண்ண முடியும். 63 எம்.எல்.ஏக்களை வச்சிக்கிட்டு ஜெயலலிதா என்ன பண்ணுச்சி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கவில்லை. ஒருவேளை மக்கள் தி.மு.க வேண்டாம் என்று நினைக்கிறார்களோ?
அதெல்லாம் ஒன்னும் இல்லை. 1977-ல எம்.ஜி.ஆர் ஓஹோன்னு ஜெயிச்சார். 80-ல 2 சீட்டைத் தவிர எல்லா இடத்துலயும் தோத்தார். அப்ப என்னா மக்கள் அவரை வேணாம்னு சொல்லி ஒதுக்கிட்டாங்களா என்ன!. அதுக்கப்புறம் அவர் 4 தடவை ஜெயிச்சி  முதலமைச்சராகிட்டார். அதனால அடுத்த எலெக்‌ஷன்ல நாங்க ஜெயிச்சி வந்துடுவோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?
பணம் கொடுத்தாரு ஜெயிச்சாரு. அதைத் தவிர வேறென்ன இருக்கு.
ரஜினி – கமல் அரசியல் பிரவேசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால், தி.மு.க தான் ஜெயிக்கும். ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கிட்ட இரட்டை இலை சின்னம் இருக்கு. அவங்களோட செல்வாக்கான பகுதியில அவங்க ஜெயிப்பாங்க. தினகரன் ஒற்றுமையாக இருந்திருந்தா அது கொஞ்சம் சவாலாகத் தான் இருந்திருக்கும். ஆனா, திவாகரன், கிருஷ்ணப்பிரியா, நடராஜன் என ஆளாளுக்கு முரண்பட்ட கருத்துக்களை சொல்லிட்டு வர்றாங்க. கிட்டத்தட்ட வெற்றி பெற்று 30 நாள்ல ரெண்டு மூணு அறிக்கையிலயே அவரோட மரியாதையே முடிஞ்சிடுச்சி. அதுமட்டுமில்லாம, மத்திய அரசாங்கம் வேற அவங்களை நெருக்கிட்டு இருக்காங்க. அதனால் எப்படி பார்த்தாலும், ரஜினி வந்து பிரிச்சாலும் அ.தி.மு.க., வாக்குகள் தான் அங்க போகுமே தவிர வெற்றி தி.மு.கவுக்கு தான். வெளியில எல்லாரும் நல்ல அரசாங்கம் வேணும்ங்கிற முடிவுக்கு வந்துருக்காங்க. அதனால தி.மு.க.வைத் தான் தேர்ந்தெடுப்பாங்க.
ரஜினி பா.ஜ.கவுடன் மறைமுகமாக கைகோர்த்து செயல்படுவதாக பேசப்படுகிறதே?
ரஜினி பா.ஜ.கவோட எல்லாம் போக மாட்டார். போனா அங்க பத்து பைசாவுக்கு செல்லுபடியாகாது.
செயல் தலைவர் ஸ்டாலினால், கலைஞர் போன்று தடாலடியான அரசியல் செய்ய முடியவில்லை? இதனால் தி.மு.க மேல்மட்டத் தலைவர்களே அதிருப்தியாக இருப்பதாக பேசப்படுகிறதே?
தடாலடியாக என்ன பண்ணுவீங்க!…அந்த காலத்துல இந்திரா காந்தியை கலைஞர் எதிர்த்தார். 500 பேர் கைதாகி உள்ள இருந்தோம். இன்னைக்கு மத்திய அரசாங்கம் சொந்தக் கட்சிக் காரங்களயே ரெய்டுங்குறான்… இமேஜை காலி பண்ணுறாங்க. அதிகாரத்தை எதிர்த்து என்ன பண்ணிட முடியும்.  தலைமை நீதிபதி சொல்றார் இந்த அரசை எங்களால ஒன்னும் செய்ய முடிய்லைன்னு சொல்றார்.  நம்ம எல்லாம் என்ன பண்ணிட முடியும்.
இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரும். 6 மாதத்தில் தேர்தல் வரும் என தி.மு.க தலைவர்கள் ஆருடம் கூறி வருகிறார்களே! நீங்கள் சொல்லுங்கள் வரும் ச.ம.தேர்தல் 2021-லா அல்லது அதற்கு முன்னதாக அமையுமா?
அது மோடிக்கு தான் தெரியும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு யார் போட்டியாக இருப்பார்கள்?
தி.மு.க.வுக்கு போட்டியா ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இரட்டை இலை இருக்கும். ரஜினி, கமல், தினகரன் என எல்லாம் தான் போட்டியாக இருப்பாங்க. எல்லாத்தையும் மீறி தான் ஜெயிக்கணும். தி.மு.க ஜெயிக்கும். அந்த நம்பிக்கை இருக்கு.
வரும் ச.ம.தேர்தலில் மக்கள் ஏன் தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும்?
இந்த ஆட்சியில அடிக்குறாங்க பாருங்க, அந்த மாதிரி ஊழல் இல்லாமல் இருக்கும். நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். இன்னைக்கு இருக்குற இளைஞர்கள் எல்லாம் புது ஆள் வேணும்னு சொல்லி மோடியை கொண்டு வந்தாங்க. மோடி என்ன செஞ்சிட்டார்!… எனவே மக்களுக்கும் தெரியும், யார் வந்தால் நல்லது நடக்கும் என்று. நிச்சயம் தி.மு.க. தான் அடுத்து ஆட்சிக்கு வரும். தளபதி தான் முதலமைச்சராவார்.
27.01.2018 அன்று வெளியான நம்ம திருச்சி வார இதழில் வெளியானது.
செய்தி: நவீன் இளங்கோவன்
படங்கள்: குமரன்